Tuesday, 1 March 2011

எகிப்து லிபியாவில் சரிய தொடங்கும் ஏகாதிபத்தியம்


 
கடந்த இரு மாதங்களாக உலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் உலகம் ஒரு புதிய மாற்றத்திற்க்கான முயற்சியை தொடங்க இருப்பதை காட்டுகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் தங்கள் அரசியல், சமூக, பொருளாதார நிலையினை மீள் பரீசிலனை செய்யக்கூடிய நிலைக்கு இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

வெறும் 25 லட்சம் மக்களை கொண்ட துனிசீய நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சி, உலகில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதமான பரிமாணங்களில் பயணிக்க தொடங்கியுள்ளது. 32 ஆண்டுகளாக எகிப்த்தை  ஆண்டு வந்த ஹோஸ்னி முபாரக் முப்பது நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் தன் பதவியை விட்டுதர வேண்டியுள்ளது என்பது, மக்கள் புரட்சியின் வீரியம் எந்த அளவு அதிகமானது என்பதை காட்டுகிறது. இதே போலதான் இன்றைக்கு 42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்டு வரும் கடாபியின் அரசாங்கமும் பரிதவித்து வருகிறது. இந்த மக்கள் எதிர்ப்பு என்பது எதை காட்டுகிறது? இந்த மக்கள் ஏன் இன்றைக்கு வீதிக்கு வந்து போராடுகிறார்கள்? இவ்வளவு ஆண்டு காலமாக ஆண்டு வந்தோர் ஏன் சில நாட்களில் இன்றைக்கு நாட்டை விட்டு ஓடி ஒளிந்துவிட்டனர்? இதற்கெல்லாம் என்ன பதில்.

இன்றைக்கு முதலாளித்துவத்தை பின்பற்றி வரும் நாட்டின் செல்வ வளங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளிலோ அல்லது ஒரு தலைமுறையிலோ முதலாளித்துவத்தால்  சுரண்டபட முடியாது என்பதால், முடிந்த வரை தன் எண்ண ஒட்டங்களுக்கு ஏற்ற ஒரு பொம்மை அரசை அனைத்து இயற்கை வள நாடுகளிலும் நிறுவுவதே முதலாளித்துவத்தை பின்பற்றும் அமெரிக்க பேரரசின் மறைமுக திட்டமாகும். (இந்தியாவை பற்றி பிறகு அலசலாம்) இன்றைக்கு எகிப்து, லிபிய மக்களுக்காக குரல் கொடுக்கும் இதே அமெரிக்கவிற்க்கு எகிப்து மற்றும் லிபியாவின் பொருளாதார நிலை குறித்து இதற்கு முன்பு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. முதலாளித்துவத்தின் முக்கிய அம்சமே தேவைக்கு அதிகமான நுகர்வை திணிப்பதுதான்.

தேவைக்கு அதிகமான நுகர்வை ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களின் மீது திணிக்கும்போது அங்கு சில விளைவுகள் ஏற்படும். முக்கியமானதாக நுகர்வினாள் ஏற்படும் தேவைகள் பல்கி பெருகும், அதன் பொருட்டு அந்த தேவையின் பொருட்டு ஏற்படும் போட்டி என்பது நியாயமான வர்த்தக நெறிகளை முறிக்கும், லாபம் ஒன்றே குறிக்கோள் என்கிற நிலையினை இந்த போட்டி ஏற்படுத்தும். இதன் மூலம் வர்த்தக சமன்பாடு என்பது இல்லாமல் போய்விடும். இதுதான் முதலாளித்துவம் ஏற்படுத்தும் மிக முக்கிய விளைவாகும்


தேவைக்கு அதிகமான நுகர்வை திணிக்கும் போது ஏற்பட கூடிய விளைவால் அந்த நாட்டின் இயற்கை வளங்களை அழிக்க அங்கு உள்ள அரசாங்கங்கள் தொடங்கும். அப்படிதான் 30 முதல் 40 ஆண்டு காலமாக முதலாளித்துவம் எகிப்த்தையும், லிபியாவையும் மேற்க்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் நாடுகளாக மாற்றி அங்கு தனிமனித நுகர்வை பல மடங்கு அதிகபடுத்தியது. ஒரு நாட்டில் நல்ல மாற்றமோ தீய மாற்றமோ கலாச்சாரத்தில் கொண்டுவந்து விட்டால் எளிதாக அந்த மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். அதைதான் முதலாளித்துவம் எகிப்த்திலும், லிபியாவிலும் இன்னபிற நாடுகளிலும் செய்தது. இயற்கை வளத்தை அழிக்க தொடங்கும் (நேரிடையாக அழிக்காமல், முதலாளித்துவ மற்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இயற்கை வளத்தை நுகர்வுக்கு மாற்றும் தொழில்கள் தொடங்கப்படும்) போது அதன் மீதான தாக்கம் இரண்டு வகையாக வெளிப்படும்.

முதலாவதாக, இப்படி இயற்கை வளத்தை எடுத்து அதன் மூலமான தொழிற்கள் தொடங்கும் போது வெளிப்படும் இறுதி உற்பத்தி பொருள்கள் ஒன்று முதலாளித்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் பொருட்டு ஏற்கனவே திணிக்கப்பட்ட நுகர்வினால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மேலும் அதிகமாகும் அதன் பொருட்டு விலைகள் உயரும்.

இரண்டாவதாக ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட அளவே இயற்கை வளத்தை கொண்டுள்ளது. இப்படி மொத்தமாக இயற்கை வளம் அழிக்கப்படும் போது, ஒரு கட்டத்திற்க்கு பிறகு இயற்கை வளம் என்பது இல்லாமல் போவதால் அடிப்படை தேவைக்கான நுகர்வு பொருள்கள் கிடைக்காமல் சென்று விடுகிறது. இது மறைமுகமாக வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அவை என்னவென்றால், அத்தியவிசய பொருள்கள் மீதான விலையேற்றம், வேலை இழப்பு, இயற்கை பயன்பாட்டு தொழிலான விவசாயம் அழிதல் ஆகியன ஆகும்.

இப்படி இரு வகையான தீய விளைவால், ஒரு கட்டத்திற்க்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு செல்ல மக்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவார்கள். அப்படி செல்ல நினைக்கு போது இழந்துவிட்ட இயற்கையை மனிதன் உருவாக்க முடியாது. உதாரணமாக, விளைநிலங்கள் அனைத்தும் இன்றைக்கு மனை நிலங்களாகவும், பொருளாதார மண்டலங்களாகவும் மாறி வருகிறது. இதே நிலை நீடித்தால் மக்கள் ஒரு 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு பிறகு மக்களுக்கு உணவு தானியங்களும், காய்கறிகளும் கிடைக்காமல் செல்லும் போது திரும்பவும் விவசாயத்தின் மீதான பக்கம் வேறுவழியில்லாமல் திரும்புவர். ஆனால் அன்றைக்கு விவசாயம் செய்ய நிலம் என்பது இருக்காது.

மேற் சொன்ன உதாரணம்தான் இன்றைக்கு துனிசியாவிலும், எகிப்திலும், லிபியாவிலும் நடந்துள்ளது. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் அமெரிக்காவால் வளர்க்கப்பட்டு போலி புரட்சி நாயகர்களால் இத்துனை ஆண்டுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது. இந்த நாட்டில் இருந்து வெளிசென்ற இயற்கை வள மாற்று பொருள்கள் அனைத்தும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவிற்க்கும், இங்கிலாந்திற்க்கும் தான் அதிகமாக சென்று இருக்கும். துரதிருஷ்டவசமாக இவை அனைத்தும் இன்றைக்கு வரலாற்றில் வர்த்தக எண்களாக (Statistical Records) மாறி இருக்கும்.

எந்த முதலாளித்துவம் போலி புரட்சியாளர்களான முபாரக்கையும், கடாபியையும் வளர்த்துவிட்டதோ அதே முதலாளித்துவம் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன்னால் வளர்த்தப்பட்டவர்களை வரலாற்றில் மக்கள் விரோதிகளாக சித்தரித்து தப்பித்து கொள்ளும். அந்த கலையில் சிறந்ததுதான் அமெரிக்கா.

முகமூடி

No comments:

Post a Comment